உலகில் வல்லாதிக்க சக்தி ஒன்றுதான் என்ற நிலை தற்போது மாறிவிட்டதாக ஸவுதி அரேபியாவின் முன்னால் உளவுத் துறைப் பிரதானி இளவரசர் துர்க்கி அல் பைஸல் குறிப்பிட்டார் மேலும் பிராந்திய ஒத்துழைப்பு மட்டுமே சவால்களை எதிர்கொள்ள ஒரே வழி என வலியுறுத்தினார்.
ஸவுதி இளவரசர் துர்க்கி அல் பைசல், உலகளாவிய அரசியல் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்த தனது ஆழ்ந்த பார்வைகளை வெளியிட்டிருக்கிறார். காஸா, உக்ரைன் ஆகிய பகுதிகளில் நடந்த போர்கள் கூடவே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், சர்வதேச அமைப்புமுறை வேகமாகச் சிதைந்து வருவதாக அவர் எச்சரித்தார். இனி, “ஒற்றை துருவ” உலக அமைப்புமுறை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பிராந்திய ஒத்துழைப்பு மட்டுமே புதிய சவால்களை எதிர்கொள்ள ஒரே வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா இனி உலக அரங்கில் தனியாகத் தனது செல்வாக்கைச் செலுத்த முடியாது என்று இளவரசர் பைசல் சுட்டிக்காட்டினார். சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் எழுச்சி, உலகளாவிய அதிகார சமநிலையை மாற்றி, சர்வதேச உறவுகளில் புதிய திருப்புமுனைகளை உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய சூழல், சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர அமைதி ஏற்பட, பலஸ்தீனப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு காண்பது மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இரு நாடுகள் தீர்வை அடைவதற்காக, பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதன் மூலம், ஸவுதி அரேபியா பிரான்ஸுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. மேலும், இந்தப் புனிதமான முயற்சியில் இத்தாலியும் இணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
குழப்பம் நிறைந்த இந்த உலகில், வளைகுடா நாடுகள் நிதானத்தின் குரலாகத் திகழ்கின்றன என்றும், அவை இந்தப் பிராந்தியத்தை அமைதியை நோக்கி வழிநடத்தக்கூடிய ஆற்றல் கொண்டவை என்றும் இளவரசர் துர்க்கி அல் பைசல் தெரிவித்தார்.








