பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், பாலஸ்தீன தேசத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதில் ஸவுதி அரேபியாவின் தலைமைக்கு தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இது அரபு, இஸ்லாமிய உலகிற்கு ஸவுதி அரேபியா அளித்த ஒரு மிகப்பெரிய பங்களிப்பாகும்.
பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள் பேசுகையில், “வரலாற்றுச் சிறப்புமிக்க பலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பதற்கான முயற்சிகளுக்குத் தலைமை தாங்கிய ஸவுதி அரேபியாவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்று குறிப்பிட்டார். பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அவர்கள் இந்த வெற்றிகரமான முயற்சிகளுக்குத் தனிப்பட்ட முறையில் தலைமை தாங்கியதைப் பாராட்டிய அவர், “அவருடைய இந்தச் சாதனைகளை அரபு, இஸ்லாமிய உலகம் ஒருபோதும் மறக்காது. இது ஒவ்வொரு அரபு, இஸ்லாமியரின் கழுத்திலும் ஒரு கடனாக இருக்கும்” என்றும் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.
இந்தப் பாராட்டு, பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும், அவர்களின் இறையாண்மையை நிறுவுவதற்கும் ஸவுதி அரேபியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை வெளிப்படுத்துகிறது. ஸவுதி அரேபியாவின் இந்த தலைமைததுவ அணுகுமுறை பலஸ்தீன பிரச்சினைக்கு நிரந்தரமான, நியாயமான தீர்வைக் காண்பதில் அதன் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
சர்வதேச அரங்கில் பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் கிடைப்பதில் ஸவுதி அரேபியா ஆற்றிய பங்கு, மத்திய கிழக்கில் அமைதி,ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதில் அதன் இராஜதந்திர, அரசியல் செல்வாக்கின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.








