இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் காசா மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஊடுருவல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இழைக்கும் குற்றங்களைச் சவூதி அரேபியா மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறி இஸ்ரேல் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், இந்த குற்றச் செயல்களைத் தடுக்க சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என சவூதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், காசா மற்றும் அதன் மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் இரத்தக்களரி அணுகுமுறையின் ஆபத்து குறித்து சவூதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் கொலை, பட்டினி மற்றும் கட்டாய இடப்பெயர்வு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் அவசர தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என சவூதி அரேபியா வலியுறுத்துகிறது.
காசாவில் அப்பாவி மக்களின் உயிர்களைப் பாதுகாக்க, இனப்படுகொலை மற்றும் கட்டாய இடப்பெயர்வு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதை உறுதிசெய்ய, ஆக்கிரமிப்பு அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச தீர்மானங்களை உறுதியுடன் அமுல்படுத்த வேண்டும் எனவும் சவூதி வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.








