

பல தசாப்தங்களாக கொடுங்கோள் ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டு, உள்நாட்டு யுத்தத்தால் உருக்குழைந்துபோன சிரியா தற்போது மீண்டெல ஆரம்பித்திருக்கிறது இந்நிலையில் அகன்ற இஸ்ரேல் கனவை நனவாக்கிக்கொள்ளத் துடிக்கும் இஸ்ரேல் சிரியாவின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவ்வப்போது அதன் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது இவ்வாறான இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு சவூதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஸவுதி வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், சகோதர நாடான சிரியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகவும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டுவரும் அத்துமீறல்களுக்கு சவூதி அரேபியா தனது கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது. 1974ஆம் ஆண்டு சிரியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்பட்ட இராணுவ விலகல் ஒப்பந்தத்தை இது அப்பட்டமாக மீறுவதாகும். அத்துடன், சிரியாவின் சுவைதா மாகாணத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழலுக்கு இஸ்ரேலின் இந்த அத்துமீறல்களே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதற்காக அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சவூதி அரேபியா தனது முழு ஆதரவையும் வழங்குகிறது. மேலும், சிரியா தனது நாட்டின் இறையாண்மை அதன் நிறுவனங்களின் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக நிலைநிறுத்துவதற்கும் சவூதி அரேபியா தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது.
சிரியாவை பிளவுபடுத்தும் எந்தவொரு அழைப்பையும் சவூதி அரேபியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. அத்துடன், அனைத்து சிரிய மக்களும் அமைதியுடன் கூடிய நல்லிணக்கத்தின் பாதையில் ஒன்றிணைந்து, புதிய சிரியாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் சவூதி அரேபியா அழைப்பு விடுக்கிறது.
மேலும், இஸ்ரேலின் தொடர்ச்சியான அத்துமீறல்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், சிரியாவின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை இறையாண்மை ஆகியவற்றிற்கு ஆதரவாக உறுதியுடன் நிற்க வேண்டும் என்றும் சவூதி அரேபியா சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கிறது. என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.