

சவுதி அரேபியாவில் ஆசிரியர்களைத் துன்புறுத்தினால் ஒரு மில்லியன் ரியால் அபராதமும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கற்பிக்கும் ஆசிரியர்களின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க சவுதி அரேபியா வலுவான விதிமுறைகளையும் சட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சவூதி அரேபியாவில் புதிய 2024/2025 கல்வியாண்டிற்கான கல்வி நடவடிக்கைகள், ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 18, 2024 அன்று தொடங்கிய போது சவூதி அரேபியாவின் கல்வி அமைச்சகம் இந்த சட்டத்தை அறிவித்துள்ளது.
ஓர் ஆசிரியரை வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ அல்லது ஊடகங்கள் மூலமாகவோ அல்லது சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ தாக்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரியால் அபராதமும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படவுள்ளது.
ஆசிரியருக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கருத்தை இஸ்லாம் மிகவும் வலியுறுத்தி உள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் காலம் முதல் இது பேணப்பட்டே வந்துள்ளது. ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்பது பொதுவாக எல்லா மதங்களும் போதிக்கும் ஒரு போதனையே. எனினும் சமீப காலமாக மனித உரிமை என்ற போர்வையில் ஆசிரியர்களுக்குரிய மரியாதை குறைக்கப்பட்டதன் விளைவாக மாணவர்களின் அடாவடித்தனங்களும் ஒழுக்கமீறல்களும் அதிகரித்துள்ளமை யாவரும் அறிந்ததே.
இந்நிலையில் மாணவர்களின் நன்மை மற்றும் முன்னேற்றம் என்பவற்றை கருத்தில் கொண்டு ஆசிரியர்களை சிறந்த பயிற்றுவிப்பாளர்களாகவும் அடுத்த தலைமுறையின் சிறந்த பாதுகாவலர்களாகவும் ஆக்கும் நோக்கில் இச்சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.