

காசா பகுதியில் அதிகாரப்பூர்வமாகப் பஞ்சம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படையின் இனப்படுகொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு (IPC) அறிக்கை, காசா பகுதியில் உணவுப் பாதுகாப்பு மிக மோசமாக உள்ளதைக் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் சவுதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தி வரும் இனப்படுகொலைக்கு சவுதி அரேபியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மனித குலத்திற்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களுக்குத் தண்டனை அளிக்க சர்வதேச சமூகம் உடனடியாக முன்வர வேண்டும் என்றும் சவுதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.
மேலும், சர்வதேச சமூகம், குறிப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகள், காசாவில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் பஞ்சத்தை உடனடியாக நிறுத்தத் தலையிட வேண்டும் என்றும் சவுதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் இந்தச் செயல்கள் பாலஸ்தீன சகோதர மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், இது சர்வதேச சட்டங்களை முற்றிலும் மீறுவதாகும் என்றும் சவுதி அரேபியா சுட்டிக்காட்டியுள்ளது. காசா மக்களுக்கு உதவவும், இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பை நிறுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சவுதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.