சவூதி அரேபியா, எகிப்து, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நான்கு தரப்பு முக்கிய ஆலோசனைக் கூட்டம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்றது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னணியில், குறிப்பாக பாகிஸ்தானின் மத்தியஸ்தம் உள்ளிட்ட பிராந்திய நிலவரங்கள் மற்றும் போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் முடிவில், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாக நான்கு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் மேம்படுத்தும் வகையில், இரு தரப்புக்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைய வேண்டும் என அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
மேலும், லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவத் தாக்குதல்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்தும் இக்கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. தற்போதைய நெருக்கடியின் தாக்கங்களைக் குறைத்து, பிராந்தியத்தில் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் மீண்டும் நிலைநாட்ட, தொடர்ச்சியான ராஜதந்திர முயற்சிகள், ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இக்கூட்டம் உறுதி செய்துள்ளதாக சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில், சவூதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான், பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான முகமது இஷாக் தார், எகிப்து வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறை அமைச்சர் டாக்டர் பத்ர் அல்-அப்துல்ஆட்டி மற்றும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் ஆகியோர் கலந்துகொண்டனர்.






