சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள கிங் பைசல் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (KFSHRC), சுமார் 10 கிலோகிராம் எடையுள்ள 2 வயது குழந்தைக்கு ‘ஸ்வென்சன்’ (Swenson) எனப்படும் அதிநவீன ரோபோட்டிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது! இந்தக் குழந்தை குடல் இயக்கத்தை முடக்கும் ‘ஹிர்ஷ்ஸ்ப்ரங்’ (Hirschsprung’s disease) என்ற அரிய வகை பிறவி நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. குழந்தைகளின் இடுப்புப் பகுதி மிகவும் சிறியதாக இருப்பதால் நரம்புகள் மற்றும் தசைகளுக்கு இடையே செய்யப்படும் இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையாகும். எனினும், ரோபோட்டிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நரம்பு செல்கள் இல்லாத பெருங்குடலின் ஒரு பகுதியை மிகத் துல்லியமாக அகற்றி, ஆரோக்கியமான பகுதியை மருத்துவர்கள் வெற்றிகரமாக இணைத்துச் சாதனை படைத்துள்ளனர்.
சுகாதாரத்துறையில் தொடர்ந்து பல அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்தி வரும் இந்த கிங் பைசல் மருத்துவமனை, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் முதலிடத்திலும், 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் தலைசிறந்த 250 மருத்துவமனைகள் பட்டியலில் 12-வது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!






