அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை “ஒரு சிறந்த மனிதர், அற்புதமான நண்பர் மற்றும் தன் நாட்டிற்காக எதற்கும் அஞ்சாத மாபெரும் போர்வீரன்” என வெகுவாகப் புகழ்ந்துள்ளார்! அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற ‘எதிர்கால முதலீட்டு முன்னெடுப்பு’ (FII) மாநாட்டில் பேசிய ட்ரம்ப், “இப்படி ஒரு இளவரசரைப் பெற்றதற்காக சவுதி அரேபியா பெருமைப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவும் சவுதியும் வரலாற்றின் ‘மிகச்சிறந்த’ பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நேட்டோ (NATO) அல்லாத தங்களின் மிக முக்கிய நட்பு நாடாக சவுதி அரேபியாவை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாகவும் பெருமிதத்துடன் அறிவித்தார்.
மத்திய கிழக்கு போர் நிலவரம் குறித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப், பல ஆண்டுகளாகப் பிராந்தியத்தில் நிலவி வரும் ஈரானின் அச்சுறுத்தல்களை அமெரிக்கா விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் என சூளுரைத்தார். “ஈரான் எங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளக் கெஞ்சுகிறது” என்று குறிப்பிட்ட அவர், வளைகுடா நாடுகளின் தலைவர்கள் நேட்டோ நாடுகளை விட அமெரிக்காவிற்கு மிக நெருக்கமான கூட்டாளிகளாக இணைந்து செயல்படுவதாகவும் பாராட்டு தெரிவித்தார்!






