சவூதி அதிகாரிகளின் சிறப்பு ஏற்பாடுகளுக்குப் பாராட்டு; ஹஜ் யாத்ரீகர்களுக்கான ஒதுக்கீடு 3,500 ஆகும்.
ஜெட்டா, நவம்பர் 09, 2025:
இலங்கையிலிருந்து 2026ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரையில் பங்கேற்கவுள்ள யாத்ரீகர்களுக்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில், 2025ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திடப்பட்டது.
இலங்கை தூதுக்குழுவின் தலைவரும், மத கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சருமான முனீர் முலப்பர் மற்றும் சவூதி அரேபியாவின் ஹஜ் உம்ரா பிரதி அமைச்சர் கலாநிதி. அப்துல் ஃபத்தா பின் சுலைமான் மஷாத் ஆகியோரே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், 2026 ஹஜ்ஜில் கலந்துகொள்ளும் இலங்கை யாத்ரீகர்களுக்கு வசதியளிக்கவும், சேவை செய்யவும் இரு அரசாங்கங்களின் பரஸ்பர புரிதல் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டுகிறது.
இன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட ஹஜ் ஒதுக்கீடு 3,500 ஆக உள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்திடும்போது, பிரதி அமைச்சர் முனீர் முலப்பர், ஹஜ் 2025க்கான சவூதி அதிகாரிகளால் செய்யப்பட்ட சிறந்த ஏற்பாடுகளுக்காக இலங்கை அரசாங்கத்தின் பாராட்டுகளைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கை யாத்ரீகர்களுக்கு ஹஜ் 2026 வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதிசெய்ய, ஹஜ் உம்ரா அமைச்சகத்துடன் நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர இலங்கை தயாராக இருப்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், நாட்டில் ஹஜ் செயற்பாடுகளை முறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள், குறிப்பாக ஹஜ் சட்டமூலம் குறித்தும் எடுத்துரைக்கும் வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். இதன் போது இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்ளார், வரவிருக்கும் ஹஜ் பருவத்திற்காக செயல்படுத்தப்பட்டு வரும் குழுவின் ஒழுங்கு, இயக்கச் செயல்பாடுகள் பற்றியும் விளக்கினார்.
பிரதி அமைச்சர் முலப்பர், சவூதி ஹஜ் உம்ரா அமைச்சரான கலாநிதி. தவ்ஃபிக் ஃபவ்சான் அல்ரபியாவையும் சந்தித்துப் பேசவும், ஹஜ் சேவை வழங்குநர்களுடன் தொடர்புகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கையெழுத்து நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழுவில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், ஜெட்டாவிலுள்ள பதில் துணைத் தூதுவர் மஃபூசா லஃபீர், மருத்துவ ஒருங்கிணைப்பாளர் கலாநிதி. அஸீஸ் முஹம்மது ஷிஹான், ஹஜ் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி. எம்.என்.எம். அஷ்ரஃப் ஆகியோரும் அடங்குவர்.
Abdul Sattar







