சவுதி சுகாதாரத் துறையில் மாபெரும் வளர்ச்சி: ரியாதில் உலக சுகாதார மாநாட்டில் ₹ 2,75,000 கோடிக்கு (124 பில்லியன் ரியால்) மேல் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
ரியாது (சவுதி அரேபியா):
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் நடைபெற்ற உலக சுகாதார மாநாடு 2025 (Global Health Forum), சவுதி சுகாதாரத் துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமைந்தது. இம்மாநாட்டில், சுகாதாரத் துறையில் புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில், 124 பில்லியன் சவுதி ரியாலுக்கும் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹ 2,75,000 கோடி அல்லது 33 பில்லியன் அமெரிக்க டாலர்) அதிகமான மதிப்புள்ள முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
சவுதி சுகாதாரத் துறை அமைச்சர் ஃபாஹத் அல் ஜலாஜில் அவர்கள் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ‘சவுதி விஷன் 2030’-ன் இலக்குகளை அடைவதற்கான சுகாதாரத் துறை மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தங்கள் பார்க்கப்படுகின்றன.
முக்கிய ஒப்பந்தங்களின் அம்சங்கள்:
- உள்நாட்டு மருந்து உற்பத்தி: உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களான சனோஃபி (Sanofi), மெர்க் (MSD), மற்றும் ஃபைசர் (Pfizer) ஆகியவற்றுடன் இணைந்து சவுதி நிறுவனம் லைஃபெரா (Lifera) தடுப்பூசிகள் மற்றும் முக்கிய உயிர் மருந்துப் பொருட்களின் உற்பத்தியைத் தன்னிறைவு அடையும் வகையில், சவுதி அரேபியாவிலேயே துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- செயற்கை நுண்ணறிவு (AI) மருத்துவம்: சவுதி AI நிறுவனங்களான HUMAIN மற்றும் LEAN ஆகியவற்றுடன் இணைந்து ‘செயற்கை நுண்ணறிவு மருத்துவர் (AI Physician)’ மூலம் சிகிச்சை அளிக்கும் மருத்துவச் சோதனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
- கூகுளுடன் கூட்டு: சுகாதார அமைச்சகம் கூகுள் (Google) நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்மார்ட் ஹெல்த் கோச்’ என்ற திட்டத்தை ‘சஹ்தி’ (Sehhaty) செயலி மூலம் தொடங்குகிறது. இது பயனர்களுக்கு தனிப்பட்ட உடல்நல வழிகாட்டியாகச் செயல்படும்.
- கட்டமைப்பு முதலீடு: அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் சாதனங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் ஒப்பந்தம் உட்பட, பல பில்லியன் ரியால்கள் மதிப்புள்ள மருத்துவக் கட்டமைப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள், சவுதி அரேபியாவை பிராந்திய மற்றும் உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மருத்துவப் புத்தாக்க மையமாக நிலைநிறுத்தும் அதன் இலக்கை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.








