சவூதி அரேபியா, லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அத்துமீறிய தாக்குதல்களுக்குத் தனது மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, லெபனானின் இறையாண்மை மற்றும் அந்நாட்டு ராணுவத்தின் மீது நடத்தப்படும் எத்தகைய தாக்குதல்களையும் தாங்கள் முற்றிலுமாக நிராகரிப்பதாகச் சவூதி அரேபியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காகத் தேசியக் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, இஸ்ரேலியத் தாக்குதலில் உயிரிழந்த லெபனான் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினருக்கும், லெபனான் அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் சவூதி அரேபியா தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. மேலும், லெபனானின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அனைத்துச் சூழல்களிலும் லெபனான் அரசாங்கத்துடனும் மக்களுடனும் சவூதி அரேபியா தோளோடு தோள் நிற்குமென உறுதியளித்துள்ளது.
தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தீவிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், லெபனான் ராணுவத்திற்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இலக்காகக் கொண்டு இஸ்ரேலிய ஆளில்லா விமானம் (ட்ரோன்) கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. கர்தாலி – நபதியா (Khardali – Nabatieh) சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் கொடூரத் தாக்குதலில், விஸ்ஸாம் சப்ரா (Wissam Sabra) என்ற பிரிகேடியர் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரியும், அவருடன் பயணித்த மற்றொரு ராணுவ வீரரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல் குறித்து லெபனான் ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இஸ்ரேல் நடத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் கேப்டன் அந்தஸ்திலான இரண்டு உயர் அதிகாரிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் என மொத்தம் மூவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் மக்கள் மீதும் ராணுவத்தின் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இத்தகைய கொடூரமான தாக்குதல்கள், இந்தப் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவருவதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து அமைதி முயற்சிகளையும் முறியடிக்கும் நோக்கத்தையே வெளிப்படுத்துவதாக லெபனான் ராணுவம் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.





