காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஷர்ம் எல் ஷேக் அமைதி உச்சி மாநாட்டில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்க மாட்டார் என்று அவரது அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தது. இதற்குக் காரணமாக அவர் “மத விடுமுறைகள்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, எகிப்து அதிபரின் செய்தித் தொடர்பாளர், நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியுடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, நெதன்யாகு இன்று காசா குறித்த ஷர்ம் எல் ஷேக் உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், பின்னர் எகிப்திய அதிபர் மாளிகை நெதன்யாகு உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று உறுதிப்படுத்தி மற்றொரு அறிக்கையை வெளியிட்டது.
எகிப்து-இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள எகிப்திய நகரமான ஷர்ம் எல் ஷேக், இன்று காசாவில் அமைதி குறித்த உச்சி மாநாட்டை நடத்துகிறது. கத்தார் அமீர், ஜோர்டான் மன்னர், துருக்கி, இந்தோனேசியா, பிரான்ஸ், சைப்ரஸ், அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் அதிபர்கள், ஈராக், பாகிஸ்தான், பிரிட்டன், கனடா, இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், நார்வே ஆகிய நாடுகளின் பிரதமர்கள் மற்றும் ஜெர்மனியின் சான்சலர், மற்றும் சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் உட்பட சுமார் 20 அரபு மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.





