லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் கோட்டையாகக் கருதப்படும் தெற்குப் புறநகர்ப் பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (புதன்கிழமை) மிகக் கொடூரமான தொடர் வான்வெளித் தாக்குதல்களை நடத்தியது. பெய்ரூட் நகர வீதிகளில் எங்கும் கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியும் பதற்றமும் நிலவி வருகிறது.
நூற்றுக்கணக்கானோர் பலி இந்த கோரத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பல்வேறு தரவுகள் வெளியாகியுள்ளன. லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் 112 பேர் உயிரிழந்ததாகவும் 837 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், லெபனான் சிவில் பாதுகாப்புப் படையின் (Civil Defense) தகவல்படி, இதுவரை 254 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1165 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ரத்தக்களறியுடன் காயமடைந்த பொதுமக்கள், நெரிசல் மிகுந்த வீதிகளில் தங்கள் வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளை நோக்கி நடந்தே செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. “எங்கள் நாட்டின் மருத்துவமனைகள் அனைத்தும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன” என லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் ரகான் நாசர் அல்-தின் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு “கடந்த மார்ச் மாதம் இந்தப் போரில் ஹிஸ்புல்லா அமைப்பு இணைந்த பிறகு, நாங்கள் நடத்திய ‘மிகப்பெரிய குண்டுவீச்சுத் தாக்குதல்’ இதுவே ஆகும்” என இஸ்ரேலிய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெய்ரூட், பெக்கா (Bekaa) மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லாவின் சுமார் 100 ராணுவத் தலைமையகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை வெறும் 10 நிமிடங்களுக்குள் ஒரே நேரத்தில் தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2024-ல் நடந்த ‘பேஜர்’ (Pager) தாக்குதலுக்குப் பிறகு ஹிஸ்புல்லா சந்தித்த மிகக் கடுமையான அடி இதுதான் என இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு ராணுவத்தின் எச்சரிக்கை போர்நிறுத்தம் குறித்த வதந்திகள் பரவி வருவதால், லெபனானின் தெற்குப் பகுதிகளை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப நெடுஞ்சாலைகளில் குவிந்து வருகின்றனர். ஆனால், “இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால், தெற்குப் பகுதிகளுக்குத் திரும்ப வேண்டாம்; வெடிக்காத வெடிபொருட்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பொருட்களால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்” என லெபனான் ராணுவமும், ஹிஸ்புல்லா அமைப்பும் பொதுமக்களுக்குக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
லெபனானுக்குப் போர்நிறுத்தம் இல்லை ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முடிவை ஆதரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. இருப்பினும், ஈரானுடனான இந்த 2 வார போர்நிறுத்த ஒப்பந்தம் (Truce), “லெபனானில் நடைபெறும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் பொருந்தாது” என இஸ்ரேல் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், போர்நிறுத்தம் தொடர்பாகத் தங்களுக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் வரவில்லை என லெபனான் அரசு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.






