கலாநிதி: அப்துல் சத்தார் (மதனி)
சவூதி அரேபியா: புனித மிகு ரமழான் மாதத்தை முன்னிட்டு, மக்கா அல்-ஹரம் மற்றும் மதினா அல்-நுபவி ஆகிய இரு பெரும் புனித பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருப்பதற்கான உத்தியோகபூர்வ முன்பதிவுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் ஆர்வலர்கள் இதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
முக்கிய திகதிகள் மற்றும் காலக்கெடு
முன்பதிவு ஆரம்பம்:
மார்ச் 5, 2026 (வியாழக்கிழமை) – சவூதி நேரப்படி காலை 11:00 மணி.
முன்பதிவு முடிவு: அனுமதிக்கப்பட்ட இடங்கள் நிரம்பியவுடன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வது நிறுத்தப்படும்.இஃதிகாஃப் காலம்: ரமழான் 20-ஆம் இரவில் தொடங்கி ஈதுல் பித்ர் (பெருநாள்) இரவு வரை.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
இஃதிகாஃப் சேவையைப் பெற விரும்புவோர் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்:
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
செல்லுபடியாகும் இகாமாவோ (வசிப்பிட அனுமதி), அல்லது தரிசிப்பு (Visit) விசா, அல்லது உம்ரா விசா வைத்திருக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
சரிபார்ப்புக் குறியீட்டை (OTP) பெறுவதற்குச் சவூதி அரேபிய தொலைபேசி எண் அவசியமாகும்.
விண்ணப்பிக்கும் நடைமுறை
விண்ணப்பதாரர்கள் பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றித் தங்களை முழுமையாகப் பதிவு செய்து கொள்ளலாம்:
அதிகாரப்பூர்வ இணையதளம்: முதலாவதாக https://alharamain.gov.sa என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
சேவையைத் தொடங்குதல்: இணையதளத்தில் உள்ள “Start Service” (சேவையைத் தொடங்கு) என்பதை அழுத்தவும்.
உள்நுழைதல்: ‘நபார்’ (Nafath) முறைமை மூலமாக உள்நுழையவும் அல்லது புதிய கணக்கை உருவாக்கவும்.
இடத்தைத் தேர்வு செய்தல்:
மக்கா அல்-ஹரம் அல்லது மதினா அல்-நுபவி பள்ளிவாசல்களில் உங்களுக்கு விருப்பமான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
தகவல்களைப் பதிவிடுதல்: கோரப்பட்டுள்ள அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் துல்லியமாக நிரப்பவும்.
ஒப்புதல்: நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை முறையாக வாசித்துப் பார்த்து அவற்றை ஏற்றுக் கொள்ளவும்.
விழிப்புணர்வு வீடியோ:
இஃதிகாஃப் தொடர்பான கட்டாய விழிப்புணர்வு வீடியோவைப் பார்க்கவும்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல்:
இறுதியாக உங்கள் விண்ணப்பத்தை உறுதிப்படுத்திச் சமர்ப்பிக்கவும்.
முக்கிய குறிப்பு
பதிவுகள் அனைத்தும் மின்-முறைமை (Electronic) வழியாக மட்டுமே நடைபெறும். இடங்கள் மிக விரைவாக நிரம்பிவிடும் என்பதால், முன்கூட்டியே பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புனிதமான இந்த இறை இல்லங்களில் இஃதிகாஃப் இருக்கும் பாக்கியத்தை நமக்கும் உங்களுக்கும் அல்லாஹ் வழங்கி, நம்முடைய அமல்களை அங்கீகரிப்பானாக.






