சவுதி புவியியல் ஆய்வு மையம் (SGS), புனித ஜம்ஜம் நீரின் தரம் மற்றும் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதி செய்வதற்காக அதிநவீன தொழில்நுட்ப மற்றும் கண்காணிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக அறிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு ஏற்ப, நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு மற்றும் அதன் தரத்தை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கும் பணிகளை ‘ஜம்ஜம் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையம்’ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம், ஜம்ஜம் நீரை வடிகட்டுதல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல் போன்ற சுத்திகரிப்புப் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் நீரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் புதிய சவால்களை எதிர்கொள்ள இன்னும் மேம்பட்ட கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுவதாக சவுதி புவியியல் மையம் தனது எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக இந்தப் புனித நீரின் தூய்மையையும், நிலைத்தன்மையையும் எவ்வித சமரசமுமின்றிப் பாதுகாப்பதே தங்களின் முக்கிய இலக்கு என சவுதி அரசு உறுதியளித்துள்ளது






