கிங் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான மையம் (King Salman Humanitarian Aid and Relief Centre – KSrelief), ரியாத்தில் உள்ள அதன் தலைமையகத்திலிருந்து நேற்று முன்தினம் (வியாழக்கிழமை), சிரிய சகோதர மக்களுக்கு உதவ சவுதி நிலவழி நிவாரணப் பாலத்தின் (Saudi Land Relief Bridge) ஒரு பகுதியாக, அவசியமான அனைத்து வசதிகளுடன் கூடிய 10 நவீன ஆம்புலன்ஸ்களை அனுப்பியது. இந்த ஆம்புலன்ஸ்கள் அப்துல்லா அல்-ராஜ்ஹி தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டு, சிரிய சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும்.
இதன் மூலம், சவுதி நிலவழி நிவாரணப் பாலத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியா இராச்சியம் சிரிய சகோதர மக்களுக்கு இதுவரை வழங்கிய அத்தியாவசிய உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
கிங் சல்மான் நிவாரண மையம் மூலம் சவுதி அரேபியா இராச்சியம் சிரிய மக்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை வழங்கிய உதவிகளில்:
- 18 நிவாரண விமானங்கள் சவுதி விமான மற்றும் நிலவழி நிவாரணப் பாலத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
- 839 லாரிகள் மூலம் 14,000 டன்களுக்கும் அதிகமான உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் தங்குமிடப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
- சிரியாவில் உள்ள சகோதரர்களுக்காக ‘அமல் தன்னார்வத் திட்டத்தின்’ (Amal Voluntary Programme) கீழ் 1,738 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- இதனுடன், பொருளாதார மேம்பாட்டிற்கான பயிற்சித் திட்டங்கள், முன்முயற்சிகள் மற்றும் உளவியல் ஆதரவுத் திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த உதவிகள், நெருக்கடிகள் மற்றும் இன்னல்கள் ஏற்படும் காலங்களில் சகோதர மற்றும் நட்பு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் சவுதி அரேபியா இராச்சியம் மேற்கொண்டு வரும் பங்களிப்பை உறுதிப்படுத்துவதுடன், சிரியாவில் உள்ள சகோதரர்களுக்கு இராச்சியம் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவின் நீட்சியாகும்.





