சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ‘கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்’ (Joint Strategic Defense Agreement) அடிப்படையில், பாகிஸ்தான் ராணுவப் படையின் ஒரு சிறப்புப் பிரிவு சவுதி அரேபியாவின் கிங் அப்துல்அஜீஸ் விமானப் படைத்தளத்தை (King Abdulaziz Air Base) வந்தடைந்துள்ளதாகச் சவுதி பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பங்கேற்கும் போர் விமானங்கள்: இந்த ராணுவப் படையில் பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த அதிநவீனப் போர் விமானங்கள் (Fighter jets) மற்றும் இதர ஆதரவு விமானங்களும் (Support aircraft) இடம்பெற்றுள்ளன. இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையிலான ராணுவ ஒருங்கிணைப்பைத் தீவிரப்படுத்தும் நோக்கிலேயே இந்தப் படைகள் சவுதி வந்தடைந்துள்ளன.
செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல்: இந்தக் கூட்டு ராணுவ நடவடிக்கையானது, இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளவும், கூட்டுப் பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும் பெரிதும் உதவும். இதன் மூலம் ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனை (Operational readiness) உயர்த்தவும், கூட்டுப் பாதுகாப்புத் திறன்களை (Defensive capabilities) மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ராணுவப் பரிமாற்றங்கள் பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் பாதுகாப்பையும், அமைதியையும் நிலைநாட்டப் பெரும் பங்களிக்கும் எனவும், சவுதி மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஆழமான ராணுவ மற்றும் மூலோபாய உறவுகளை இது வெளிப்படுத்துகிறது எனவும் சவுதி பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிக்கும் சூழலில், பாகிஸ்தான் படைகளின் இந்த வருகை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.





