சவுதி அரேபியாவின் நிலப்பரப்பின் மீது ஈரான் மீண்டும் எந்தவொரு தாக்குதலையும் நடத்துவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, சவுதிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஈரான் தரப்பிற்கு பாகிஸ்தான் நினைவூட்டியுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இது குறித்துத் தெரிவித்தபோது:
”எங்களுக்கு இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ஈரான் தரப்பிற்கு நான் தெளிவுபடுத்தினேன். அதேவேளையில், சவுதி அரேபியாவின் நிலப்பரப்பு ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஈரான் தரப்பு வலியுறுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.
மேலும், சவுதி அரேபியாவில் 25 இலட்சம் பாகிஸ்தானியர்கள் வசிப்பதையும், ஈரானில் 33 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் சிக்கியிருப்பதையும் இஷாக் தர் சுட்டிக்காட்டினார்.
அணு ஆயுத பலம் கொண்ட நாடான பாகிஸ்தான் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை கடந்த செப்டம்பர் மாதம் சவுதி அரேபியாவுடன் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






