உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் சவுதி அரேபியாவின் சிறப்பான மத்தியஸ்தப் பணிகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெகுவாகப் பாராட்டியுள்ளார். உலக அமைதிக்காக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் வழிகாட்டுதலின்படி, ரியாத் மற்றும் ஜெட்டாவில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையேயான பலகட்டப் பேச்சுவார்த்தைகளை சவுதி வெற்றிகரமாக நடத்தியது. இதற்கிடையே, வாஷிங்டன் சென்ற சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்த அவர்கள், காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும் ஆலோசித்தனர். காசாவில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதன் அவசியத்தை அமெரிக்காவிடம் வலியுறுத்திய சவுதி அமைச்சர், பலஸ்தீன பிரச்சினைக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு பெற்ற ‘இரு-நாடுகள் தீர்வு’ (Two-state solution) மட்டுமே நிலையான ஒரே வழி என்பதையும் ஆணித்தரமாக சுட்டிக்காட்டினார்.






