வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்க அதிகாரிகள் மற்றும் தீவிரவாதிகளின் குழு ஒன்று மஸ்ஜிதுல் அக்ஸா ஷரீஃப் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு சவுதி அரேபியா இராச்சியம் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கை அனைத்துலக நெறிமுறைகள் மற்றும் சாசனங்களின் அப்பட்டமான மீறல் என்றும், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்றும், இஸ்லாமியப் புனிதத் தலங்களின் புனிதத்தன்மைக்கு இழைக்கப்பட்ட மீறல் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஜெருசலேம் மற்றும் அதன் புனிதத் தலங்களின் வரலாற்று மற்றும் சட்டபூர்வமான நிலையைப் பாதிக்கும் எந்தவொரு செயலையும் இராச்சியம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக மீண்டும் வலியுறுத்தியதுடன், இஸ்ரேலிய பதற்றத்தைக் குறைக்கவும், ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வரவும், நியாயமான மற்றும் விரிவான சமாதானப் பாதைக்குத் திரும்பவும் சர்வதேச சமூகம் தனது பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.





