கலாநிதி: அப்துல் சத்தார் (மதனி)
கொழும்பு, ஜனவரி 13 கொழும்பில் நேற்று நடைபெற்ற மூன்றாவது சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியின் பரிசளிப்பு விழாவில், இந்தியாவில் உள்ள சவூதி தூதரகத்தின் மத விவகாரங்களுக்கான அதிகாரி மதிப்புக்குரிய பத்ர் இப்னு நாஸிர் அல் அனஸி ஆற்றிய உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
சவூதி தூதுவர் கௌரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களின் சார்பில் கலந்துகொண்ட அவர், இரு நாடுகளுக்குமிடையிலான சர்வதேச உறவை இந்தப் போட்டி மேலும் வலுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தமது உரையில், இரு புனிதத் தலங்களின் காவலரான சவூதி மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மது பின் ஸல்மான் ஆகியோரின் வழிகாட்டலில், அல்குர்ஆனைப் பாதுகாப்பதற்கும் அதன் தூய விழுமியங்களை உலகம் முழுவதும் பரப்புவதற்கும் சவூதி அரேபியா முன்னுரிமை அளித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இலங்கையில் இந்தப் போட்டியை நடத்துவதன் மூலம் முஸ்லிம்களின் இதயங்களில் அல்குர்ஆன் கொண்டுள்ள உயரிய இடத்தைப் பிரதிபலிக்க முடிந்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இலங்கையின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்தப் போட்டியை மிக நேர்த்தியாகவும் சர்வதேசத் தரத்துடனும் ஏற்பாடு செய்திருந்தமைக்காக அவர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். நடுவர் குழுவின் நேர்மையான மதிப்பீடு சர்வதேச ரீதியில் இப்போட்டிக்குக் கிடைத்துள்ள நற்பெயருக்கு முக்கிய காரணம் என அவர் பாராட்டினார்.
போட்டியில் பங்கேற்றுத் திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவியரை வாழ்த்திய அவர், அல்குர்ஆன் அவர்களின் வாழ்க்கையில் ஒளியாகவும் மறுமையில் பரிந்துரைப்பவராகவும் அமைய வேண்டுமென பிரார்த்தித்தார்.
இறுதியாக, சவூதி அரேபியா சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வரும் மிதவாதம், அமைதி, மனிதநேயப் பணிகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கி வரும் ஒத்துழைப்பைப் பாராட்டிய அவர், இரு நாடுகளுக்குமிடையிலான இந்தச் நட்புணர்வு மென்மேலும் வளர வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஷேக் அவர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆதரவே இத்தகைய நிகழ்வுகள் வெற்றிகரமாக அமையக் காரணம் எனவும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.








