இஸ்ரேலிய அரசின் அமைச்சர் ஒருவர், ஆக்கிரமிப்புப் படைகளின் பாதுகாப்புடன் புனித அல்-அக்ஸா மசூதி (Al-Aqsa Mosque) வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததைச் சவுதி அரேபியா மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்துள்ளது.
இது குறித்துச் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், சர்வதேசச் சட்டங்களை இஸ்ரேல் தொடர்ந்து அப்பட்டமாக மீறுவதையும், இஸ்லாமியப் புனிதத் தலங்களின் மாண்பைக் குலைப்பதையும் சவுதி அரேபியா முற்றிலுமாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்தச் செயல் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான திட்டமிட்ட ஆத்திரமூட்டல் என்றும் சவுதி அரசு கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “பாலஸ்தீன மக்கள் மீதும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் புனித மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மீதும் இஸ்ரேல் நடத்தும் அனைத்து அத்துமீறல்களையும் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு சர்வதேசச் சமூகத்திற்கு (International Community) உள்ளது. அல்-அக்ஸா மசூதியின் வரலாற்று மற்றும் சட்டப்பூர்வமான அந்தஸ்தை அனைவரும் மதிக்க வேண்டும். இதுபோன்ற தொடர்ச்சியான மற்றும் மோசமான நடவடிக்கைகளுக்காக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அரசு உடனடியாகப் பொறுப்பாக்கப்பட வேண்டும்” எனச் சவுதி அரேபியா ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது.






