
.avif?w=768&auto=format%2Ccompress&fit=max)
சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அவர்கள் இன்று ஜித்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற, பாலஸ்தீன மக்கள்மீது தொடர்ந்து நடக்கும் இஸ்ரேலிய தாக்குதலைப் பற்றிய, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்களின் 21வது விசேஷ கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த விசேஷ கூட்டத்தில் அவர் உரையாற்றும்போது, பாலஸ்தீன சகோதரர்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள், கொலைகள், பட்டினிச்சாவு, இடம்பெயர்த்தல், இன அழிப்பு போன்றவற்றுக்கு எதிராக உறுப்புநாடுகளின் ஒற்றுமையும் ஆதரவும் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறினார். மேலும், இது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதால், அனைத்து இஸ்லாமிய நாடுகளும் தங்களின் நிலைப்பாட்டை ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அவர் தொடர்ந்து, சர்வதேச சமூகம் உடனடியாக தலையீடு செய்து, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் குற்றங்களை நிறுத்த வேண்டும் என்றும், காசா மீது முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டை விதிக்கப் போவதாக வெளியிடப்பட்ட அறிக்கைகளை கண்டிக்க வேண்டும் என்றும், பாலஸ்தீனர்களை தங்கள் நிலத்திலிருந்து வெளியேற்றும் திட்டங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதேசமயம், காசா மீது விதிக்கப்பட்ட முற்றுகையை உடைக்கவும், உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை தடையின்றி உடனடியாக அனுப்பவும் வலியுறுத்தினார்.
மேலும், பாலஸ்தீனத்தில் பணியாற்றும் ஐ.நா. நிறுவனங்களான யுன்ர்வா மற்றும் பிற அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம் என்றும், பாலஸ்தீன அரசின் திறன்களை மேம்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூறினார். மேலும், இஸ்ரேலின் ‘‘அகண்ட இஸ்ரேல்” எனும் கருத்தையும், ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் குடியேற்ற மற்றும் விரிவாக்கத் திட்டங்களையும் சவுதி அரேபியா கண்டிக்கிறது என்றும், 1967 எல்லைகளின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலேம் தலைநகரமாகக் கொண்ட சுதந்திரமான பாலஸ்தீன அரசை அமைப்பது பாலஸ்தீனர்களின் வரலாற்றுச் சட்டபூர்வ உரிமை எனவும் வலியுறுத்தினார்.
அத்துடன், காசாவில் போர்நிறுத்தம் ஏற்படுத்த எகிப்து மற்றும் கத்தார் மேற்கொள்ளும் முயற்சிகளை சவுதி ஆதரிப்பதாகவும், அரபு–இஸ்லாமிய அமைச்சரவை குழுவின் தொடர்ந்து நடைபெறும் சர்வதேச தொடர்புகளையும் அவர் குறிப்பிட்டார். மேலும், இரு நாடு தீர்வை நடைமுறைப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு கூட்டணி மற்றும் சவுதி–பிரான்ஸ் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு அதிகமான ஆதரவு கிடைப்பதாகவும், பல ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஓஷியானியா நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
உரையின் இறுதியில், இஸ்ரேலிய குற்றச்செயல்கள் தண்டனையின்றி தொடர்ந்தால் அது சர்வதேச சட்டங்களையும், அமைதி மற்றும் பாதுகாப்பையும் பாதித்து, பிராந்தியத்திலும் உலகளாவிய அளவிலும் கலக்கம் மற்றும் மோதல்களை உருவாக்கும் அபாயம் உண்டு என்று எச்சரித்தார்.
இந்தக் கூட்டத்தில், வெளியுறவு அமைச்சகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான உபசெயலாளர் டாக்டர் அப்துர் ரஹ்மான் பின் இப்ராஹிம் அல்-ரஸி, வெளியுறவு அமைச்சரின் அரசியல் ஆலோசகர் இளவரசர் முஸ்அப் பின் முகமது அல்-ஃபர்ஹான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் சவுதி நிரந்தர தூதர் டாக்டர் சாலிஹ் பின் ஹமத் அல்-ஸுஹைபானி ஆகியோரும் பங்கேற்றனர்.