
புனித அல்-குர்ஆனினை மனனமிட்ட உள்ளங்களுக்கு வருடாவருடம் மகுடம் சூட்டும் சர்வதேச நிகழ்வு..! 45 ஆவது தடவையாகவும் சிறப்பாக நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாத்தின் புனித வேதமாம் அல்-குர்ஆனுக்காக வேண்டி வருடாந்தம் சர்வதேச அளவில் ஏற்பாடு செய்யப்படும் மாபெரும் நிகழ்வாகிய “மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்-குர்ஆன் மணனப் போட்டி” 45 ஆவது தடவையாகவும் சென்ற (26-02-1447) (20-08-2025) புதன் கிழமையன்று நிறைவுற்றது.
புனித அல்-குர்ஆன் எனப்படுவது; மனனமிடுவதற்கு இலகுவானது. அல்லாஹ் தஆலா; அல்-குர்ஆனிலேயே அதனைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது: “நிச்சயமாக, அவ்வல்-குர்ஆனை நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டு எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?” என பல தடவைகள் வினாத்தொடுக்கின்றான். (அத்: 54: வச: 17, 22, 32, 40).
“அல்-குர்ஆன் மனனம், அதன் விளக்கம் மற்றும் அதனை ஓதுதல் என்பவற்றுக்கான; மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேசப் போட்டி” என்பதே இப்போட்டியின் உத்தியோகபூர்வ மகுடமாகும். இது 1979 (ஹி 1399) ஆம் வருடம் தொடக்கம் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதுவரை இப்போட்டிகளில் 6969 போட்டியாளர்கள் உலகில் நாளா பாகங்களில் இருந்தும் கலந்துகொண்டுள்ளனர். வருடாவருடம் புனித மக்கமா நகரில் புனித மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெறும் இப்போட்டியானது; 45 ஆவது தடவையாக சென்ற வாரம் மிக வெற்றிகரமாக நடந்தேறியது.
இப்போட்டி ஐந்து பிரிவுகளைக் கொண்டது. அதில் முதலாம் பிரிவு: அல்-குர்ஆனை முழுவதுமாக தஜ்வீத் முறைப்படி மனனமாக ஒப்புவிப்பதுடன்; அதனை ஓதும் ஏழு முறைக் கிறாஅத்துகளையும் விளக்கத்துடன் ஒப்புவிப்பது.
இரண்டாம் பிரிவு: அல்-குர்ஆனை முழுவதுமாக தஜ்வீத் முறைப்படி மனனமாக ஒப்புவிப்பதுடன்; அதன் தப்ஸீர் விளக்கங்களையும் தெரிந்திருப்பது.
மூன்று: அல்-குர்ஆனை முழுவதுமாக தஜ்வீத் முறைப்படி மனனமாக ஒப்புவிப்பது.
நான்கு: அல்-குர்ஆனின் பதினைந்து ஜுஸ்உகளை தொடராக தஜ்வீத் முறைப்படி மனனமாக ஒப்புவிப்பது.
ஐந்து: அல்-குர்ஆனின் ஐந்து ஜுஸ்உகளை தொடராக தஜ்வீத் முறைப்படி மனனமாக ஒப்புவிப்பது. இக்கடைசிப் பிரிவு (OIC) அங்கம் வகிக்காத நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்குரியதாகும்.
இம்முறை 128 நாடுகளைச் சேர்ந்த 179 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களில் 19 நாடுகளைச் சேர்ந்த 21 வெற்றியாளர்கள் மாபெரும் பணப்பரிசில்களைத் தட்டிக்கொண்டனர்.
முறையே தஷாத் குடியரசு, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தலா இரண்டு பரிசில்களை வென்றுள்ளன.
மேலும்; நைஜீரியா, அல்ஜீரியா, எத்தியோப்பியா, யமன், செனிகல், ஐக்கிய அமெரிக்கா, பாலஸ்தீனம், எகிப்து, இந்தோனேசியா, ரீயூனியன் தீவு, சோமாலியா, மாலி, தாய்லாந்து, போர்த்துக்கல், மியன்மார் (பர்மா), பொஸ்னியா ஆகிய நாட்டு மாணவர்களும் பரிசில்களைத் தட்டி சாதனை படைத்துள்ளனர்.
பரிசில்கள் வழமைபோன்று வியக்கத்தக்க தொகையினை எட்டியதை எவராலும் மறுக்க முடியாது. முதலாம் பிரிவின் முதல் பரிசாக ஐந்து இலட்சம் சவுதி ரியால்கள் வழங்கப்பட்டன. அதாவது இலங்கை ரூபாயில் சுமார் 40 மில்லயன் ஆகும். அதனை தஷாத் குடியரசினைச் சேர்ந்த மாணவர் வென்றார். அதேபோன்று இரண்டாம் இடம் 4.5 இலட்சம், மூன்றாம் இடம் நாலு இலட்சம் என அந்த பரிசில்களின் பட்டியல் தொடர்கின்றது. முழுவதுமாக வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் மாத்திரம்; 4 நான்கு மில்லியன் சவூதி ரியால்களை எட்டியது. மேலும் பங்குபற்றியவர்கள் அனைவருக்குமாக ஒரு மில்லியன் சவூதி ரியால்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. மொத்தம் ஐந்து மில்லியன் சவூதி ரியால்கள் போட்டியாளர்களுக்கு மாத்திரம் பணமாக வழங்கப்பட்டுள்ளன. அதாவது இலங்கை ரூபாயில் சுமார் 400 மில்லயன் (40 கோடிகள்) ஆகும்.
இம்முறை இப்போட்டியில் இலங்கை வரகாபொலையைச் சேர்ந்த ஹாபிழ் சஅத் அப்துர் ரஹ்மான் கலந்துகொண்டார். இவர் சென்ற ஜனவரி மாதம்; சவூதி அரேபிய அரசின் அனுசரணையில் இலங்கையில் நடைபெற்ற தேசிய அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இரண்டாம் பரிசினை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புனித அல்-குர்ஆனுக்கான சேவைகளையும் கண்ணியத்தினையும் வழங்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வல்லவன் அல்லாஹ் கிருபை நல்குவானாக.
சவூதி அரேபிய அரசிற்கும் குறிப்பாக இஸ்லாமிய விவகார அமைச்சகத்திற்கு உலக முஸ்லிம்கள் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளனர்.
நன்றி கலாநிதி அம்ஜத் ராஸிக் மதனி பக்கத்திலிருந்து.