
ஸஊதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் நடைபெற்ற மூன்று நாள் “குளோபல் வாட்டர் எக்ஸ்போ” வியாழக்கிழமை நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் உலக நிபுணர்கள், அதிகாரிகள், தொழில் முனைவோர் கலந்து கொண்டு நீர் மேலாண்மை மற்றும் மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
Enowa நிறுவனத்தின் நீர் மறுசுழற்சி பிரிவு தலைவர் நிக்கோலஸ் பர்னெட் தெரிவித்துள்ளார்:
“கழிவுநீர் என்பது வெறும் கழிவு அல்ல; அதில் நீர், சக்தி, கனிமங்கள், உரம் போன்ற வளங்கள் உள்ளன. அவற்றை மறுசுழற்சி செய்யாமல் வீணாக்குவது பொதுச் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
ஸஊதி அரேபியா சமீப ஆண்டுகளில் நீர் மேலாண்மையில் முன்னோடி நாடாக திகழ்கிறது. 2022 ஆம் ஆண்டு மட்டும் 2 பில்லியன் கன மீட்டர் கழிவுநீர் சுத்தம் செய்யப்பட்டது. அதில் 22% வேளாண்மை துறையில் பயன்படுத்தப்பட்டது. 2025க்குள் 25% மறுசுழற்சி இலக்கு அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Enowa நிறுவனம் 100% கழிவுநீரையும் சேகரித்து மறுசுழற்சி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024இல் தினசரி 7 மில்லியன் லிட்டர் கழிவுநீர் மீண்டும் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இது NEOM இயற்கை பாதுகாப்புப் பகுதிகளில் பசுமை வளர்ச்சிக்கு பயன்பட்டது. மேலும் களிமண் மூலம் உரம், பியோகேஸ் உற்பத்தி போன்ற முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நீர் மறுசுழற்சி முயற்சிகளின் மூலம் ஸஊதி அரேபியா, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பொருளாதார வளர்ச்சிக்கும் உலகுக்கு முன்மாதிரியாக உள்ளது.


