சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், சவூதி அரேபியாவின் சட்டங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மிஷால் பின் அலி அல்-பலாவியை ரியாத்தில் உள்ள சவூதி நீதி அமைச்சில் சந்தித்தார்.
நீதித்துறை விவகாரங்கள் மற்றும் சட்டரீதியான ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடிய இரு தரப்பினரும், இத்துறைகளில் ஒத்துழைப்பை மேலும் முன்னெடுப்பதற்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினர்.
இலங்கை மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையில் கைதிகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவாக இறுதி செய்வது குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நலன் சார்ந்த விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பின் போது, தூதுவருடன் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளரும் சான்சரி தலைவருமான (Head of Chancery) திருமதி தமித்ரி சமங்கிகா மற்றும் திரு. சஜித் ஆகியோரும் கலந்துகொண்டனர்.






