ஈரான் அண்மையில் சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் சில பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியது. இதுதொடர்பாக சவூதியின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு ‘கோழைத்தனமான தாக்குதல்’ என்றும், சர்வதேச மற்றும் மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. இந்தச் செயலை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்தும் இரண்டு ஆளில்லாத விமானங்களைத் (Drone) கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களைச் சவூதி அரேபியா தனது அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டு முறியடித்துள்ளது. ஈரானின் எட்டுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதில் சவூதியின் வான் பாதுகாப்பு அமைப்பு திறம்படச் செயல்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது நாட்டு மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், சவூதியின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தங்கியிருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.






